திங்கள், 7 டிசம்பர், 2009

மரியா , தனிமை ,வலிமை

ஜெயமோகனின் இருவர் கட்டுரை படித்து முடிந்ததும் ஒரு சில நிமிடங்கள் சிந்திக்க கூட இயலாமல் இருந்து விட்டேன் . மக்தலீனா மரியா பல பல கேள்விகளுடன் இன்றும் வலம் வந்து கொண்டிருக்கிறார், புராதன யூத நூல்களிலும், அப்போஸ்தலர்களின் அதிகார பூர்வமாக பிரசுரித்த சுவிசேஷங்களிலும் அப்படி பிரசுரிக்க இயலாத போன நூல்களிலும் , தோமஸின் சுவிசேஷத்திலும் மற்று விவிலியன் ஆய்வு நூல்களிலும் மற்றும் மரியா ஒரு புதிராகவே இருக்கிறாள் . கிறிஸ்துவுக்கு பின் மக்தலின மரியா அப்போஸ்தலர்களின் ஆண் கொள்கைகளுக்கு அப்பாற்பட்ட பெண்ணாக இருந்திருக்க தான் வாய்ப்பு என்று சில ஆய்வுகள் கூறுகின்றன. தோமஸின் சுவிசேஷத்தில் கடைசி வாக்கியம் இப்படி கூறுகிறது,

"114. Simon Peter said to them, "Make Mary leave us, for females don't deserve life." Jesus said, "Look, I will guide her to make her male, so that she too may become a living spirit resembling you males. For every female who makes herself male will enter the kingdom of Heaven"

இங்கு, அன்று யூத சமூகத்தில் பெண்களின் வாழ்க்கை மிகவும் மோசமாக இருந்திருக்கும் நிலைமையை சுட்டுகிறது . அரவிந்த மகரிஷியிடம் சீடராக வந்து வாழ்ந்து மறைந்த மீரா அம்மாவை நினைக்கிறேன் . விவேகானந்தர் சீடராக ஏற்று கொண்ட நிவேதிதா அம்மாவை நினைக்கிறேன் .

விருந்தாவனத்தில் உள்ள கிருஷ்ணா கோவிலுக்குள் அனுமதிக்க முடியாது என்று அங்குள்ள பூசாரிகளும் பண்டித மக்களும் பிடிவாதம் பிடித்த சூழலில் மீரா நிறைந்த பக்தியால் ஆடியும் பாடியும் வருகிறாள் .ஒருவர் அவளை தடுத்து நிறுத்தி இந்த கோவிலில் பெண்களை அனுமதிப்பதில்லை என்று கூற, அட்டகாசமாக சிரித்த படி மீரா கேட்கிறாள் , கண்ண பரமாத்மாவை தவிர இங்கு வேறு ஆண்களும் இருக்கிறார்கள் என்று நான் அறியேன். இதன் சரியான பொருள் உட்கொண்ட அந்த மனிதன் மீராவின் பாத நமஸ்காரம் தேடுகிறான்.

வேதிக் காலகட்டங்களிலும் அதற்கு பிறகும் பெண்களுக்கு
அறிவு ரீதியாகவும் ஞான ரீதியாகவும் இருந்த இடம் மறுக்க முடியாதது தான் . ப்ருஹதாரண்யா உபநிடத்தில் யாக்ஞவல்க்யனுக்கு நிகராக வரும் மைத்ரேயி ,கார்க்கி ,

இவர்களை எல்லாம் நினைத்து பார்க்கும்போது மரியா எவ்வளவு துயரங்களை பெற்றிருப்பார் என்பது உறுதி படுகிறது. ஜெயமோகன் சொல்வது உண்மை . இயேசு ஒரு பெண்ணிய வாதியாகவும் இருந்திருக்கிறார். அன்றைய யூதர்களின் இடையே பெண்களின் திறமை ,அறிவு , வலிமை மதிக்கப்படாமல் கூட இருந்திருக்கலாம் ..ஆனால் அதற்கும் முன் ஒரு சில அறிவார்ந்த அரசிகளை,எஸ்தர் போன்றவர்களை வாசிக்க முடிகிறது.

இயேசுவின் காலகட்டத்தில் இயேசு கற்பித்த ஞான வழிகளை ,ஜீவன் முக்திக்கான அரிய நுட்பங்களை ஆண் சீடர்களை விட வேகமாக அறிந்து உணர்ந்து கொண்டதாலோ, அல்லது சுதந்திரம் அற்ற அடிமை மனோபாவத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் யூத பெண்களின் இடையே இருந்து வந்த அறிவான பெண் என்பதினாலோ ,இயேசுவின் முழு பிரியத்துக்கும் ஆளானவள் என்ற காரணத்தாலோ மரியா இயேசுவின் சீடகர்களிடமிருந்தே பொறாமை கலர்ந்த வெறுப்பை பெற்றிருக்க வாய்ப்பிருக்கிறது .
ஒன்று மட்டும் அன்றும் இன்றும் கொஞ்சம் கூட மாற்றம் இல்லாமல் ,இன மொழி இட பாகுபாடின்றி ஆண்களின் அடிப்படை குணமாக இருந்து வருவது, பிடிக்காத பெண்களை படு கேவலமாக பேசுவது தான் . விபச்சாரி என்று அழைத்து விட்டால் அவள் நொறுங்கி விடுவாள். தளர்ந்து விடுவாள் ,இயலாமை தொற்றி கொள்ளும் பெண் எப்படி வேண்டுமானாலும் வசைப்பட கூடியவள் . ஒதுக்கு புறங்களின் மாசுப்பட்ட படிக்கட்டுகளில் ஆண்களின் வார்த்தைகளில் மட்டும் பேசி ,பார்த்து ,கேட்டு வாழ்வின்றி வாழ்ந்து மடிந்து விடுகிறாள். நம்மூரிலேயே இது இந்த 21 ஆம் நூற்றாண்டிலேயே இருக்கும் பட்சம் மக்தலீனா மரியாவின் நிலைமையின் பயங்கரம் நினைத்து அச்சம் கொள்கிறேன் .

அவர் எழுதிய சுவிசேஷங்கள் பலதும் ஆணாதிக்க சமூகம் அழித்திருக்கும் வாய்ப்பை பல ஆய்வாளர்களும் குறிப்பிட்டுள்ளனர். எத்தனை வலிமை கொண்ட மனதுடன் மரியா இயேசுவின் கல்லறையில் காத்திருந்திருப்பாள் . எத்தனை புரிதல்களுடனான காத்தலும் கூட அது. பெண்மையை மறுக்கும் சமூகத்தில் அறிவு ரீதியாக போர் தொடுத்த முரண்பட்டே வாழ்ந்து முடித்த பெண் ஞானி . இயேசுவின் வார்த்தைகள் கூட நாம் இன்று அறிவது சரியாக தானா? மரியாவின் மீதான இயேசுவின் அன்பை புரிந்து கொள்ள முடியாதவர்கள் ,அவளை விபச்சாரி என்று உரக்க கூறியவர்கள் , அவளின் சமர்ப்பண மனோ நிலையை உணர தவறியவர்கள் வாயிலாகவா நாம் அந்த ஞான சூரியனை அறிகிறோம்? ஜெயமோகனின் எழுத்து இப்படியெல்லாம் கூட எண்ண தூண்டுகிறது ...

இவை எனக்குள் எழுந்த பல சந்தேகங்களில் ஒரு சில ஆழம் குறைந்த கேள்விகள் ? மீதம் ...............


http://www.jeyamohan.in/
http://www.gnosis.org/library/marygosp.htm
http://users.misericordia.edu//davies/thomas/Trans.htm