புதன், 1 டிசம்பர், 2010

மொழியும் உடலும்


                  

                     மொழி ஒரு சமூகத்தின் பண்பாட்டை கலாசாரத்தை தலைமுறைகள் தோறும் சுமந்து செல்லும் அற்புதமான வாகனம். அதற்கு வழி வகுக்காவிட்டால் நாம் காலங்களாக நம் பருவ நிலைக்கேற்ப ஆரோக்கியமாக  வாழ்ந்து வந்ததின் பயன் இல்லாமல் போய்விடும் .இங்கு ஒன்று சொல்ல வேண்டியிருக்கிறது ஆரோக்கியம் என்ற வார்த்தை மேற்கத்திய பொருளில் வரும் வெறும் உடலின் நோயற்ற நிலை  மட்டும் அல்ல. முழுமையான ஒரு வாழ்நிலையை  குறிக்கிறது, 
                        
மன அமைதியுடன், வளமார்ந்த சிந்தனைகளுடன்,பகுத்தறிவு செயல்களுடன் இனிய சொற்களுடன், நோயற்ற தேகத்துடன் ,செழுமையான சமூக பொறுப்புடன், இயற்கையை அறிந்து மதித்து அதற்கிணங்கி வாழ்வதற்கு தான் ஆரோக்கியம் என்று பொருள். இதை கடைபிடிக்க வேண்டி நம் முன்னோர்கள் எத்தனையோ பேர் ரிஷிகளாக முனிவர்களாக வாழ்ந்து உணர்ந்து நமக்கு அந்த ஓங்கிய அறிவை தந்துள்ளனர். மேற்கத்திய நாடுகளில் வெளி உலக அறிவியலில் எத்தனை ஆழமாக ஈடுப்பட்டு பல உண்மைகளையும் பயனுள்ள பல பொருட்களையும் கண்டுபிடிக்கிறார்கள். 



  அதை போலவே ,நம் முன்னோர்களில் உள்ளுலகை அதாவது மனிதனின் செயல்களுக்கும் குணங்களுக்கும் ஆதாரமான மனதையும் அதை தாண்டியும் ஆராய்ச்சி செய்த விஞ்ஞானிகள் தான் ரிஷிகளும் முனிவர்களும். அவர்களின் ஏராளமான கண்டுபிடிப்புகள் இன்று மேற்கத்திய உலகமே எடுத்து பயன்ப்படுத்திக்கொண்டிருக்கிறது. உதாரணம்.  1 .  பதஞ்சலி முனிவரின் யோகா சாஸ்திரங்கள்  , 
2 .   அகத்தியனில் இருந்தும் தொடங்கி நூற்றுகணக்கான முனிவர்களால் கண்டுபிடிக்கப்பட்ட இயற்கைக்குள் ஒளிந்திருக்கும் பல பல அற்புதமான மூலிகைகளையும் தியான முறைகளையும் உட்கொண்ட ஆயுர் வேதா( ஆயுர் = வாழ்க்கை ,வேதா = அறிவு ) மற்றும் சித்த( புலன்களால் அறிய முடியாத அதிநுட்பம் ) வேதா ஆகியவை .



                        மட்டுமல்ல ஒரு மொழி ஒரு சமூகத்தில் உருவாகுவது  அந்த சமூகம் வாழும் தட்ப வெட்ப நிலையை பொறுத்து தான் . அங்கு உற்பத்தியாகும் தானியங்கள் காய் கறிகள் ,பழங்கள் போன்றவையால் அந்த சமூகத்தில் வாழும் மனிதனின்  உடல் எப்படி அமைக்கப்படுகிறதோ  அதற்கேற்ப  அவனின் ஒலி வெளி வரும் விதமும் அமைகிறது. இங்கு அவனின் குரல் கற்றை  ,மூளையின் அமைப்பு ,பற்களின் அமைப்பு, தாடி எலும்பின் அமைப்பு ,மூக்கின் அமைப்பு எல்லாம் ஒன்றுக்கொன்று சம்பந்தப்பட்டே அமைகிறது. இங்கிருந்து தான் ஒவ்வொரு பகுதி மக்களின் குரலும் ,இசையும் மாறுப்படுகிறது,  (பனி மனிதனின் இசை தான் மொழி தான் சிறந்தது என்று துள்ளும் ஒரு சில அற்பங்கள் நம்மூரில் எழுத்தாளர்களாக இருந்து வருவதை நினைக்கும்போது வேதனை தான் .  விஞ்ஞான ரீதியாக நம் வாழ் முறையை அணுகாத இவர்களை பார்த்தால் ஐயோ பாவம்  என்று தான் சொல்ல வேண்டும் .) இதனால் தான் மனோ தத்துவ நிபுணர்கள் குழந்தைகளுக்கு மன அழுத்தமோ நரம்பு தளர்ச்சியோ தீவிர உணர்சிகளோ வராமல் இருக்க தாய் மொழி கல்வி தான் சிறந்தது என்கிறார்கள் . ஒரு மனிதனின் வளர்ச்சியை கூட அவனின் தாய் மொழி எப்படி கட்டுப்படுத்துகிறது பாருங்கள்.   



                       இதையெல்லாம் சுமந்து வரும் நம் மொழியை நாம் பேசி பயன்படுத்தவில்லை என்றால் நாம் இழக்க போவது அருமையான ஆரோக்கியமான ஒரு வாழ்க்கையை தான். நம் மொழி உடல் ,மன   ரீதியான வளர்ச்சிக்கு மற்று மொழியினருக்கு எப்படி பயன் இல்லையோ அப்படியே தான் அவர்களின் மொழியும் நம் செழிப்பான வாழ்க்கைக்கு சிறந்ததல்ல. இன்றைய காலகட்டத்தில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பிற்கான மொழியும் தளமும் இருக்கிறது. ஆனால் வாழுவதை பற்றி தெரியாமலேயே அல்லது முரண்ப்பட்ட கருத்துக்களுடன் இருப்பதால் மன நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே  வருகிறது .

                   .. இதற்காக எத்தனை மாத்திரைகள் எடுத்தாலும் பயனில்லை. மேற்கத்திய மருத்துவ உலகமே இதற்கான மருந்து, தியான முறைகளும் யோகாவும் தான் என்று உறுதிப்படுத்தி விட்டனர். இந்த அற்புதமான வாழ்முறைகள் இருப்பது நம் மொழியில் தான். பாருங்களேன் எத்தனை நூற்றாண்டுகளாக நம் முன்னோர்கள் மொழியுடன் கலர்ந்த இதை (கலாசாரம் என்ற பெயரில் அல்லது பண்பாடு  என்ற பெயரில்)எடுத்து வந்திருக்கிறார்கள். அடுத்த தலைமுறைக்கும் இன்னும் வரும் அத்தனை தலைமுறைகளுக்கும்  இதை பத்திரமாக எடுத்து செல்லவேண்டியது தான் நம் கடமை. மொழி எவ்வளவு முக்கியமானது பார்த்தீர்களா.. .. தாய் மொழி கண்ணல்ல உயிரே தான் .......... 

வெள்ளி, 11 ஜூன், 2010

இந்திய இசையை இறுக்கும் பூணூல்கள் ?

         
                                  இசை பலக்காலங்களிலாக பல்வேறு ஆய்வுகளுக்கும் புதுமைகளுக்கும் உள்ளாகி வாழ்ந்தும்   வளர்ந்தும் கொண்டிருந்தது,   இந்திய இசையில் பதினெட்டாம் நூற்றாண்டு வரை புதுமைகள் என்பது  ராகங்களில் இழைச்சேர்க்கப்பட்ட காதலாகவும் பக்தியாகவும் தத்துவங்களாகவும் இருந்தன. பல பல வட்டார மொழிகளின் வழியாக நாட்டுப்புற மக்களின் அனைத்து உணர்வுகளையும் வெளிப்படுத்தும் வடிகாலாகவும், தூது அனுப்பும் முறையாகவும், மன சோர்வுக்கான  மருந்தாகவும் மகிழ்ச்சியின் ஊடகமாகவும் இசை இருந்தது. அப்பொழுதும் இதில் ராகங்களின் தன்மையும் பாவங்களின் நிறைவும் ஒன்றுக்கொன்று போட்டிப்போடும் விதம் அமைந்திருந்தது குறிப்பாக சொல்ல வேண்டிய ஒன்று. இன்று இசையில் ஹார்மொனைசிங் திறன் அதிகமாக சேர்ந்திருக்கும் வாய்ப்புண்டு. 

                             அன்றைய  இசை இன்றைய இசை என்ற ஒன்றில்லை, கிழக்கத்திய இசை பாணி அதிகவும்   சோலோ (solo ). அதாவது single frequency யை சார்ந்ததாகவும் மேற்கத்திய இசை அதிகவும் ஹார்மொனி வகையை சார்ந்ததாகவும் காணப்படுகிறது,.  மேற்கத்திய இசை கலைஞனின்  திறமை ,அவர் அதை அமைப்பதால் மட்டுமல்ல ஒரு கூட்டு முயற்சியின் ,முக்கியமாக ,இசை கருவிகளின் ஒருங்கிணைந்த இசை வடிவத்தை அமைத்தல் என்பதாலும் வித்தியாசப்படுகிறது . சுருதி சேர  பல வித இசை கருவிகளின் ஒன்று சேர்ந்த ஒலித்தல் . மொசார்ட் பீதோவன் ,விவால்டி , வ்லாடிமேர் ஹோரோவிஸ் ,யுபி  ப்ளேக் போன்ற பியானோ கலைஞர்கள் ஆகட்டும் அல்லது ராப் ,போப் ரக இசை மேதைகளாகட்டும், ஹார்மொனைசிங் வகையில் தான் வருகிறார்கள் . அவர்களின் இசையின் புரிதல்கள் இங்கிருந்து தான் தொடங்குகிறது. 
                                    

                              ஆசிய பகுதிகளிலும் மற்றும் இத்தகைய இசை வேரோட்டம் மிக அரிதாக தான் காணப் படுகிறது. காமேலன் என்ற இந்தோனேசியன் இசையில் பல்வேறு கருவிகளை அதிகமாக பயன்படுத்தி இசைப்பதுண்டு. இதற்கு அமெரிக்காவில் நல்ல வரவேற்பு.இந்திய இசை மேதைகளான ஹரி பிரசாத் சௌரசிய ,சாகிர் ஹுசைன் ,போன்ற எத்தனையோ தலை சிறந்த இசை மேதைகளை மேற்கத்திய இசை உலகம் இன்றும் வியந்து தான் பார்க்கிறது என்பது உண்மை. ஒவ்வொரு ஊரின் பருவ  நிலையை சார்ந்து தான் அங்கிருக்கும் உணவு முறையும், வாழ் நிலை பண்ப்பாடுகளும் அமைந்துள்ளது. இதில் இருந்து தான் அவர்களின் கலை வடிவங்களும், இலக்கிய வடிவங்களும் உருவம் பெற்று முழுமை பெற்றது. .

                               இந்திய இசை நமது ஆயிரக்கணக்கான இயல் வாழ்க்கை தன்மையிலிருந்து  வெளிப்பட்டது தான். சினிமா என்ற ஒரு அதி சக்தி வாய்ந்த ஊடகம் வழியாக இசை வெளிப் படத்   துவங்கியது  முதல் இசையின் தனி ஆளுமை குறைய தொடங்கியது. ஆனால் மற்ற நாடுகளில் இப்படி ஒரு நிலை இல்லை. அங்கு எப்போதும் இசையின் ஆளுமை தனித்துவம் பெற்று நிற்கிறது. , இதனால் பொருளாதார ரீதியில் அங்கிருக்கும் இசை விஞ்ஞானிகளுக்கு தகுந்த இடம் இருந்து கொண்டே வருவதில் ஆச்சரியமில்லை  .

                              இங்கு சினிமா அனைத்து கலையின் வடிவம் என்ற ஒரு போலித்தனத்தில் வலிமைப் பெற்று வளர தொடங்கியதும் இசையில் புதுமைகள் என்ற ஒரு பேச்சுக்கே இடமில்லாமல் போனது. மட்டுமல்ல பிற நாட்டு இசையின் ஆதிக்கங்களும் நம்மை குழப்பி விட்டது என்று சொல்வது தான் சரியாக இருக்கும். 

                             இங்கு மேல் நாட்டு இசை வடிவத்தில் நம்மூர் உணர்வுகளை அதிகமான சப்த கோஷங்களால் பாடப்படுவது அல்லது அதிகமான இசைக்கருவிகளால் இசைப்பது தான் இந்திய இசையின் புதுமைகள் என்று யாரவது கூறினால் அவரிடம் பரிதாபப்படுவதே சரியானது என்று நான் நினைக்கிறேன். மேற்கத்திய வாழ்க்கையை சர்வசாதாரணமாக அனுகரித்து வாழ்ந்து பழகி விட்டவர்களால் அப்படி மட்டுமே சிந்திக்க முடியும் என்பதும் ஒரு பச்சை பரமார்த்தம் தான். 

                             திரு. இளைய ராஜா யார் யாருக்கு எழுதுவது  என்ற அவரது புத்தகத்தில் .ஜான்ஸ்காட் என்ற அமெரிக்க கம்போசருடன் ,(இவர் இளைய ராஜாவின் லண்டன் ராயல் பில்ஹார்மானி இசைக்குழு இசைபதிவை இயக்கியவராவர் ) நடத்திய உரையாடலை பதிவு செய்திருக்கிறார். அதில் ஜான்ஸ்காட் , இந்திய சினிமாவில் பாடலுக்கென்று உருவாகும் சூழல்கள் எப்படிப் பட்டவை என்று கேட்கிறார். . அதற்கு திரு. இளைய ராஜ தாலாட்டு முதல் ஒப்பாரி வரைக்குமான மனிதனின் அனைத்து உணர்ச்சிகளுக்கும் பாடல் தேவைபடுகிறது என்று சொல்கிறார். இத்தனை வித்தியாசமான சூழ்ல்களா என்று வியக்கிறார் ஜான்ஸ்காட் ,அதற்கு திரு. இளைய ராஜா கூறியது இப்படி ,

" ஆனால் பாடலின் பாணியோ எந்தத் தனித்தன்மையும் அற்று திரும்பத்   திரும்ப ஒரே மாதிரியான அமைப்பைத்தான் டைரக்டர்கள்  வற்புறுத்துகிறார்கள் என்பதற்கும் அதிசயித்தார். " 

அதில் திரு .இளையராஜா இப்படி தொடர்கிறார் 

" திரைப்படங்களில் நீங்கள் வாசித்தபோது உற்சாகமாக இருந்ததா? போரடித்ததா? என்று கேட்டபோது அவர் சொன்ன பதில் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஒவ்வொரு நாளும் வேறு வேறு இசையை என் முனனால் வைத்ததனால் அது எனக்குத் தொல்லையாக இல்லை என்றார்"
 . 
"ஆனால் ,இங்கே எனக்கு அப்படி இல்லையே ஒவ்வொரு படத்திலும் முந்தைய படத்தில் ஹிட் ஆன பாடலைப் போலவே வேண்டுமென்று ஒரே மாதிரியான சூழ்நிலையே கொடுக்கப் படுவதனால் என் சிந்தனையைத் தூண்டி, நானாக அதற்குச் செய்யவேண்டியது ஒன்றுமில்லாமல் போய்விடுகிறது. "

"அவர்கள் போடும் ஒரே வட்டத்திற்குள்ளே தான் நான் சுற்ற வேண்டியதாக இருக்கிறது .
அதுவும் வேறு வேறு வடிவமான வட்டமாக் இல்லையே "

                        திரைப்படங்கள் எப்படி நம் அறிவியல் ரீதியான இயல்பான இசையுடன் முரண்ப்பட்டுகொள்கிறது என்பது வேடிக்கையாக இருக்கிறது . இங்கு யாரை யார் குறை சொல்வது. 


                       துவா பாடகர்கள் ( சைபீரியாவின் தென்பகுதி நாடு துவா ) தங்கள் குரலிலேயே பல ஒலிகளை ஒரே நேரத்தில் சுருதி சேர்த்து பாட கூடிய அதிசய பாடகர்கள். கடந்த வருடம் கொல்ககொத்தாவில் ஒரு கிராமத்தில் துவா பாடகர்கள் எங்களை வியக்க செய்தார்கள். இயற்கையின் பல ஒலிகளும் அவர்களது தொண்டை வழியாக எளிதாக ஒலித்தது ஆச்சரியத்தை தந்தது 

                       நம்மூரில் சினிமாவில் இசை அமைப்பவர்களுக்கு இசை கருவி என்றால் முக்கியமாக மேலை நாட்டு இசை கருவிகள் தான். தாளம் ராகம் எல்லாமே அதை சார்ந்து உருவாகும் நிலை .

                      (தொடரும் ...............)

புதன், 2 ஜூன், 2010

இந்திய இசையை இறுக்கும் பூணூல்கள் ! 2

                                           இங்கிருப்பவர்களுக்கு கணினிமயமாக்கப்பட்ட இன்றைய இசை செய்தல் புதுமையான ஒன்று. அதில் திறம்பட பயின்றவர்கள் மிக மிக குறைவு , இந்திய தாள, ராக விழிப்புணர்வுடன் ஹார்மொனைசிங் செய்யக் கூடிய ஒரு திறமை சமீபக் காலமாக தான்
தெளிவாக இருக்கிறது. அதில் எ.ஆர் ரஹ்மான் திறம்பட செயல்படுகிறார். அதற்கு தான்
அவருக்கு ஆஸ்கார் கிடைத்ததே தவிரே, இந்திய இசையின் தனி தன்மையை
அங்கிருப்பவர்களுக்கு உணர்த்தியதால் அல்ல. 



                       இந்திய இசையிலும் எத்தனையோ ராகங்கள் இசை விஞ்ஞானிகளால் கண்டுப் பிடிக்கப் பட்டுள்ளன . அம்ருத வர்ஷினி இசைத்தால் மழை பொழியுமாம்,இங்கு மழை என்பது அதீதமான ஆனந்தத்தை குறிக்கிறது. ஸ்வரங்களுக்கு இடையே வரும் டோன்ஸ் வைத்தே ராகங்களின் பாவங்கள் மாறுகிறது. ஒவ்வொரு பொழுதுக்கும் என்ன ஒவ்வொரு உணர்ச்சிக்கும் ஏற்ற அல்லது அதை கேட்பவர்களுக்கு உணர்த்தக் கூடிய பாவங்கள் கொண்ட ராகங்கள் உண்டு.    


                      ஒரே ஆரோகன அவரோஹணங்கள் கொண்ட ஒன்றிலதிகமான ராகங்கள் வெவ்வேறு உணர்வுகளை வெளிப்படுத்தும் ஒரு வித்தியாசத்தையும் நம் இசையில் உணர முடியும். மாதங்கனின் ப்ருஹதேசி யில் ராகத்திற்கான அர்த்தம் இப்படி கொடுக்கப்பட்டுள்ளது. (மதங்கன் A.D 5  - 7  ஆம் நூற்றாண்டுக்குள் வாழ்ந்தவர் என்று கூறப் படுகிறது. இவரின் மிகத் தொன்மையான இந்த புத்தகத்தில் இந்திய இசையின் பல இலக்கணங்களும் விளக்கங்களும் உள்ளன )
யோ அசௌ த்வனி விசேஷஸ்து ,ஸ்வர -வர்ண - விபூஷிதா
 ரஞ்ஜகோ ஜனசித்தானாம் ஸா சா ராக உச்யதே 


ராகம் என்பது கேட்பவருக்குள் மகிழ்ச்சியை உருவாக்கக் கூடிய  ஸ்வர வர்ணங்களால்
அலங்கரிக்கப் பட்ட ஒரு சிறப்பு ஒலியாகும் 


                           இத்தகைய ராகங்களின் சிறப்புக்கள் மற்று இசைகளுக்குள் இல்லை. ஜிம்
போகுபவர்களாலும் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள  முடியும் . நடனம்
ஆடுபவர்களாலும் , மார்ஷியல் ஆர்ட்ஸ் பயிற்சி எடுப்பவர்களாலும் உடலை
கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள முடியும் .ஆனால் யோகாவின் சூட்சம சூத்திரங்களால்
உடலை மட்டுமல்ல மனதையும் ,புத்தியையும் சிந்தனைகளையும் கட்டுப்படுத்தி வாழ
முடிகிறது என்பதே அதன் சிறப்பம்சமாகும் .



                          மேற்கத்திய உடற்பயிர்ச்சி கூடங்களில் நம் உடலின் முழு தசைகளும் ஒருங்கிணைக்க எத்தனையோ கருவிகள் தேவைப்படுகிறது..ஆனால் யோகாவிற்கு நம் உடல் தசைகளின் பல்வேறு நிலைகள் மூச்சுக் காற்றின் ஸ்ருதியில் ,மனதின் நிலையான தாளத்தில் செய்தால் போதும் . மொத்தமான மாற்றம் நம் வாழ்வில் கிடைக்க பெறுகிறது. 


                       இது போன்ற ஒரு சூழல் தான் நம் இசை வடிவத்துக்கும் உள்ளது.  ராகங்களின் பாவங்களின் தளங்களின் லயம் . இது எப்பொழுதோ பிராமண ஆதிக்கத்தால் சாதாரண மக்களின் இயல்பான வாழ்க்கையிலிருந்தும் அறவே நீக்கப்பட்டது. பிராமணர்களுக்கு வட்டார மொழிகளில் வரும் இசைகள் வெறுப்பாகவே இருந்து வந்ததால் . மறுக்கப்பட்ட இந்த இசை பொது மக்களின் மனோ ரஞ்சிதமான இசையாக உருவெடுத்து பிற்காலத்தில் சினிமா இசைக்கு ஒரு அடிக்கல் ஆக மாறியது.

                        இங்கு இன்னொரு வருத்தம் பிராமணர்கள் ஆதிக்கம் செலுத்திய அந்த இசையை அவர்களாலேயே சரிவர பயிலவோ, அதன் உள்ளிருக்கும் உண்மையான குணங்களை புரிந்து கொள்ளவோ முடியவில்லை என்பது ஒரு புறமிருக்க ,பிராமணர்கள் அல்லாதவர்கள் இந்த துல்லியமான இசையை பழகினாலோ பாடினாலோ அவர்களால் துன்புறுத்தப்பட்டார்கள் .. இதற்கு பாடகர் யேசுதாஸ் ஒரு பெரிய எடுத்துக்காட்டு. ( இங்கு யோகா நான்கு தெரிந்த பிராமண குருக்கள் யாரும் இல்லை என்பதை நினைவுக்கூறுங்கள் )



                        சாதாரண மக்களுக்கு பிடித்த சினிமாப்பாடலுகளுடன் மிகவும்
நாகரீகப்படுத்திய இசையையும் (கர்நாடிக் இசை )பாடுகிறார் என்பதை இன்று வரைக்கும்
அவர்களால் ஏற்று கொள்ள முடியவில்லை.    இதில் இருக்கும் நகைச்சுவை என்னவென்றால்
பிராமணர் அல்லாதவர்களால் மட்டும் தான் நல்ல இசை சில சிறு புதுமைகளால் இன்றும்
ஒலித்துக்கொண்டிருக்கிறது. 



                        கமகத்தின் ஆழ் நிலைகளை குரலின் வித்தியாசத்தில் கொஞ்சம் புதுமை செய்து பாடினார் யேசுதாஸ் ..பிராமணர்களால் இதை செய்ய முடியவில்லை என்பதால் அவர்கள் மறுத்தார்கள். புதுமையை காலத்திற்கேற்ப செய்த நல்ல இசை அமைப்பாளர் தான் மலையாளாத்தில் பிரபலமான ரவீந்திரன் மாஸ்டர் ..எத்தனை ராகங்களை புதுமையின் காலச்சுவடுகளுடன் அழகாக இசைத்தார். இவர் ஒரு பிராமணன் அல்ல. மோகன ராகத்தில்  இதற்கு மேல் புதுமைகள் செய்யமுடியுமா அதும் இன்றைய மேற்கத்திய கருவிகளுடன் இணைத்தே ? என்ற கேள்வி எழும்புகிறது இளையராஜாவின் பாடல்களை கேட்கும்போது. அவரும் ஒரு அபிராமிணர்தான் . ஏன் உலக விருதுகளான ஆஸ்காரும் கிராமியும் இசைக்காக பெற்று உலகை பவனி வரும் தமிழ் தென்றல் நம் ரஹ்மானும் அபிராமணன் தானே.

                         திருமதி .அனுராத ஸ்ரீராம் , திருமதி . சுதா ரகுநாதன் ,போன்ற
எத்தனையோ கர்நாடக இசை வல்லுனர்கள் பாடுகிறார்கள். எந்த நிறத்தில் ஒரு கோடு
வரைந்தாலும் அது மிக மிக நேர்த்தியாக இருந்தால் எந்த நிறம் என்று கண்டுபிடிக்க
முடியாதோ அதேபோல் தான் அனுராதாவின் குரலும். மிக மிக மெலிந்த ஒரு நிலை அவர்
கடைப்பிடிப்பதால் அதில் எந்த பாவம் இருக்கிறது என்று சொல்வது மிக கடினம்.


                        மாடர்ன் என்ற பெயரில் பெண்ணின் ஹார்மோன் அலைவரிசை விட்டு பாடும் சுபாவின் குரலிலும் பாவங்களை பார்ப்பது அரிது தான். காரணம் ,மெல்லிய பாவங்கள் குரலின் பரந்த அமைப்பில் கரைந்து நீரில் ஒரு துள்ளி பாலூற்றினால் என்பது போல் ஆகிறது. இவர்களிடம் புதுமையான ஒன்றை அவர்களின் கடவுளாலும் எதிர்ப்பார்க்க முடியாது. காரணம் அவர்கள் பிராமண குரல்களில் பாடுகிறார்கள் என்பது தான். எந்த ஒரு விஷயத்திலும் புதுமைப் படுத்தல் அவர்களுக்கு இயலாது, மட்டுமின்றி மற்றவர்கள் அதை செய்தால் ஓராயிரம் குறைகளை காட்டி நசுக்கி விட முயல்வார்கள் . இது சரித்திரம் .
                       

                        பி சுஷீலா ,எஸ் .ஜானகி, கே.எஸ். சித்ரா இவர்களின் குரல் வளமோ ராகங்களின்  பாவங்களை தங்களின் குரல்களில் வெளிப்படுத்தக் கூடிய திறமையோ பிராமண
பாடகர்களிடம் குறைவாக தான் இருக்கிறது என்பது உண்மை.  இன்றைய தீவிர காம
உணர்ச்சிகளை கொண்டெழும் ஒலிகளை எழுப்ப மட்டுமே இன்றைய பல இளம் பாடகர்களால்
முடிகிறது என்பதும் உண்மையே. எத்தனை கருவிகளின் தலையிடல் இவர்களின் குரல்
வளத்தையும் ஒலியின் பாவ தன்மையையும் கட்டுப்படுத்துகிறது. இதெல்லாம் இல்லாமல்
இவர்களால் ஒரு பாட்டை பாவத்துடன் பாட முடிவதில்லை என்பதையும் பல மேடை
நிகழ்ச்சிகளும் தொலைக்காட்சி ஊடகங்களின் நிகழிசிகளும் வெளிச்சம் போட்டு காட்டுகிறது.

                        யோகாவும் உபநிஷத்துக்களும் எப்படி வாழ்வின் இயல்புகளையும் 

ஆதாரங்களையும் இலட்சியத்தையும் சொல்கிறதோ அதை போலவே தான் நம் இசை 
வடிவமும் .இசை எல்லோரும் படிக்கவேண்டும் என்பதால் தான் ஏராளமான புராணங்கள் கூட இசை மொழியிலேயே எழுதப்பட்டுள்ளது. ஆனால் மிக குறைவான எண்ணிக்கையில் இருந்த ஒரு சமூகத்தினால் அந்த இன்பவும் தொலைந்து விட்டது. 


                       இப்போது இருப்பவர்கள் எதற்கும் வளர்ந்த நாடுகளின் கலாச்சாரத்தை வாழ்த்திப்பாடுவதால் (அந்த வாழ்த்துப் பாடல்களையும்  முதலில் பாடியவர்களும்
பிராமண சமூகத்தினர்  தான் பிறகு பிராமண  மன நிலை கொண்டவர்களும் அதை ஏற்று பாடினார்கள் )நம்மூர் இசை நம் மக்களுக்கே தெரியாமலும் புரியாமலும் மாறி விட்ட அவல நிலையை எட்டியுள்ளது.

                    இசையை குறித்த எந்த ஒரு மதிப்பீடும் தெரியாமலே அறிந்துக்கொள்ள முயலாமலே முரண்ப்பட்டு தவறுகளை மட்டும் முன்வைத்து பேசும் ஒரு பெரிய கூட்டம் வளர்ந்து விட்டது. இவர்களில் பலரும் சொந்தமாக ஒரு வலை மனையாவது வைத்துள்ளவர்கள் தான்.

                 விவேகானந்தர் சொல்வதை போல ,"வெள்ளைக்காரத்தனம் இந்தியாவின்
மகா நோயாக மாறிவிட்டது. ஒரு ஜப்பானியன் ,வெள்ளைக்காரனின் அனைத்து இயல்புகளையும் மாறிக்கொண்டிருக்கும் கலாச்சாரங்களையும் படிப்பான் . ஆனால் ஜப்பானியனாக தான் வாழ்வான் .இந்தியன் அவனின் கலாச்சாரம் உருவான விதமோ , ஏன் என்ற அறிவு ரீதியான தேடலோ இல்லாமலேயே மற்று கலாச்சாரங்களை ஏற்றுகொள்கிறான். " 

                          

                     ரகுமானின் இசை , மேற்கத்தியர்களுக்கு எளிதாக புரியும்.காரணம் அவர்களின் இசை புரிதல்களில் நின்று கொண்டு தான் திரு.ரகுமான் பாடல்களை அமைக்கிறார்.                      நம்மூர் மக்களுக்கே இங்கிருக்கும் இசையை எப்படி அணுகுவது, புரிவது என்ற குறைந்த பட்ச கல்வியோ அறிவோ இல்லாமல் இருந்ததினால் நம் இசை எப்படி அறவே புறக்கணிக்கப்பட்டது என்பது எல்லோரும் தெரிந்தது தான். இதற்கு முக்கியக்காரணம் பிராமிணர்கள் . அவர்களும் சரியாக படிக்காமல் அதை ஆழமாக உணராமல் மற்றவர்களையும் படிக்கவிடாமல், அப்படி படித்தவர்களை பலவிதத்திலும் தொந்தரவு செய்தும் துன்புறுத்தியும் படையெடுத்து வந்ததின் பலன் இது . நமக்கே தெரியாத நம் இசையின் குணங்களை ஒரு பிற நாட்டினரால் எப்படி புரிந்து அணுக முடியும்.

                           பதஞ்சலியால் உருவாக்கப்பட்ட யோகா முறைகளை இன்று நம்மை விட சிறப்பாக படித்து அதை முழு மூச்சுடன் செய்பவர்கள் மேற்கத்தியர்கள் தான். பல ஐரோப்பியன் மற்றும் அமெரிக்க பள்ளிக்கூடங்களிலும் அரசு அலுவலகங்களிலும் யோகா ஒரு அவசிய பயிற்சியாக ஏற்கப்பட்டுள்ளது .. அதை போல் அறிவியல் ரீதியான, மனதையும் சிந்தனைகளையும் கட்டுப்படுத்தக்கூடிய திவ்யமான அழகான இனிமையான நம் இசை மேற்கத்தியர்களால் இங்கு மீண்டும் அறிமுகமாக காத்திருப்போம். .. அவர்களுக்கு அது புரியும் வரை நம் இசை மீதும் இசை கலைஞர்கள் மீதும் வீசப்படும் வாளும்  கூர்மையாக தான் இருக்கும் ..

                             யோகாவுக்கு கிடைத்த உலக அங்கீகாரம் , நம் தியான முறைகளுக்கு கிடைத்த அங்கீகாரம் ,நம் வேதங்களுக்கும் உபநிடங்களுக்கும் கிடைத்த அங்கீகாரம், நம் ஆயுர் வேதத்திற்கு கிடைத்த அங்கீகாரம் ,நம் இசையைத்  தேடி வரும் காலம் வெகு தூரமல்ல என்ற நம்பிக்கையுடன் இருப்போம்.






புதன், 13 ஜனவரி, 2010




நண்பர்களே

,                             இந்த பொங்கலை யோசிக்கும் நாளாக மாற்றுவோம், பொங்கல் கொண்டாட இன்றைய சமூகம் தகுதி உள்ளவர்களா ? பொங்கலுக்கு தேவையான அடிப்படை குணங்கள் என்ன ? நேரம் கடந்து விட்டது. பூமியின் பசுமையை, உணவின் செழிப்பை கொண்டாடினார்கள் நம் முன்னோர்கள் .இன்று பிட்சாவும் பர்கரும் பாட்சாவும் ,அடுக்கு மாடிக்கட்டிடங்களும் , ரியல் எஸ்டேட் மற்றும் பொழுதுபோக்கு ஊடகங்களின் அதிக பிரசுரமும் எதை எதை நம்மிடமிருந்து தொலைத்து விட்டதோ அது தான் பொங்கல் கொண்டாட தேவையான அடிப்படை குணங்கள் . ஒரு நிமிடம் யோசியுங்கள் . என்ன செய்யலாம். பொங்கல் கொண்டாட இயலவில்லை என்றால் மனிதக்குலம் அழிவை நோக்கி சென்றுக் கொண்டிருக்கிறது என்று அர்த்தம் .. சிந்தியுங்கள். நம் குழந்தைகளுக்கு தேவையற்ற வரலாற்று புனைவுகளை கட்டாயப்படுத்தி கற்றுக் கொடுக்கும்பொழுது ஒரு துளி பொங்கல் அறிவையும் கொடுப்போம் ...........

பசுமை மீண்டும் பொங்கும் பொங்கல் நாளுகளுக்காக உழைப்போம்























பொங்கலோ பொங்கல் என்றோம் 
பொங்கட்டும் இன்பம் என்றோம் ,


பொங்கும் கழனிகள் இல்லையேல் 
ஆடும்  தும்பிகள் இல்லையேல்
தேன்தேடும் பூச்சிகளில்லையேல் 
மண் பொங்க வெண் பொங்கல் இல்லையே   

மலைகளுண்டு மண் காக்கும் மரங்களில்லை
மேகங்கள்  கூடுக்கூட்ட இலைகளில்லை 
மழை  இறங்க  தாழ்வரையில் புல்கொடியில்லை 
மனம் நிறைந்து வரவேற்கும் பறவைகளில்லை

வான் வரைந்த வானவில்லின் நிறங்களில்லை
வண்டாடும் மல்லிகையின் முற்றங்களில்லை  
வேர்வையிலும் மண் மணக்கும் மனிதர்களில்லை
விருந்தாகும் மருந்தாகும் விதைகளுமில்லை 


சூரியனை உண்டு வாழ முடியவில்லை
சந்திரனை பார்க்க நீல வானமில்லை
விஷம் நிறைந்த பூமிக்கும்  உயிரில்லை 
கடைசி உயிர் மனிதனுக்கோ பார்வையில்லை

பொங்கலோ பொங்கல் என்கிறோம் 
பொங்கட்டும் இன்பம் என்கிறோம் 
--------------------------------------------------------

திங்கள், 7 டிசம்பர், 2009

மரியா , தனிமை ,வலிமை

ஜெயமோகனின் இருவர் கட்டுரை படித்து முடிந்ததும் ஒரு சில நிமிடங்கள் சிந்திக்க கூட இயலாமல் இருந்து விட்டேன் . மக்தலீனா மரியா பல பல கேள்விகளுடன் இன்றும் வலம் வந்து கொண்டிருக்கிறார், புராதன யூத நூல்களிலும், அப்போஸ்தலர்களின் அதிகார பூர்வமாக பிரசுரித்த சுவிசேஷங்களிலும் அப்படி பிரசுரிக்க இயலாத போன நூல்களிலும் , தோமஸின் சுவிசேஷத்திலும் மற்று விவிலியன் ஆய்வு நூல்களிலும் மற்றும் மரியா ஒரு புதிராகவே இருக்கிறாள் . கிறிஸ்துவுக்கு பின் மக்தலின மரியா அப்போஸ்தலர்களின் ஆண் கொள்கைகளுக்கு அப்பாற்பட்ட பெண்ணாக இருந்திருக்க தான் வாய்ப்பு என்று சில ஆய்வுகள் கூறுகின்றன. தோமஸின் சுவிசேஷத்தில் கடைசி வாக்கியம் இப்படி கூறுகிறது,

"114. Simon Peter said to them, "Make Mary leave us, for females don't deserve life." Jesus said, "Look, I will guide her to make her male, so that she too may become a living spirit resembling you males. For every female who makes herself male will enter the kingdom of Heaven"

இங்கு, அன்று யூத சமூகத்தில் பெண்களின் வாழ்க்கை மிகவும் மோசமாக இருந்திருக்கும் நிலைமையை சுட்டுகிறது . அரவிந்த மகரிஷியிடம் சீடராக வந்து வாழ்ந்து மறைந்த மீரா அம்மாவை நினைக்கிறேன் . விவேகானந்தர் சீடராக ஏற்று கொண்ட நிவேதிதா அம்மாவை நினைக்கிறேன் .

விருந்தாவனத்தில் உள்ள கிருஷ்ணா கோவிலுக்குள் அனுமதிக்க முடியாது என்று அங்குள்ள பூசாரிகளும் பண்டித மக்களும் பிடிவாதம் பிடித்த சூழலில் மீரா நிறைந்த பக்தியால் ஆடியும் பாடியும் வருகிறாள் .ஒருவர் அவளை தடுத்து நிறுத்தி இந்த கோவிலில் பெண்களை அனுமதிப்பதில்லை என்று கூற, அட்டகாசமாக சிரித்த படி மீரா கேட்கிறாள் , கண்ண பரமாத்மாவை தவிர இங்கு வேறு ஆண்களும் இருக்கிறார்கள் என்று நான் அறியேன். இதன் சரியான பொருள் உட்கொண்ட அந்த மனிதன் மீராவின் பாத நமஸ்காரம் தேடுகிறான்.

வேதிக் காலகட்டங்களிலும் அதற்கு பிறகும் பெண்களுக்கு
அறிவு ரீதியாகவும் ஞான ரீதியாகவும் இருந்த இடம் மறுக்க முடியாதது தான் . ப்ருஹதாரண்யா உபநிடத்தில் யாக்ஞவல்க்யனுக்கு நிகராக வரும் மைத்ரேயி ,கார்க்கி ,

இவர்களை எல்லாம் நினைத்து பார்க்கும்போது மரியா எவ்வளவு துயரங்களை பெற்றிருப்பார் என்பது உறுதி படுகிறது. ஜெயமோகன் சொல்வது உண்மை . இயேசு ஒரு பெண்ணிய வாதியாகவும் இருந்திருக்கிறார். அன்றைய யூதர்களின் இடையே பெண்களின் திறமை ,அறிவு , வலிமை மதிக்கப்படாமல் கூட இருந்திருக்கலாம் ..ஆனால் அதற்கும் முன் ஒரு சில அறிவார்ந்த அரசிகளை,எஸ்தர் போன்றவர்களை வாசிக்க முடிகிறது.

இயேசுவின் காலகட்டத்தில் இயேசு கற்பித்த ஞான வழிகளை ,ஜீவன் முக்திக்கான அரிய நுட்பங்களை ஆண் சீடர்களை விட வேகமாக அறிந்து உணர்ந்து கொண்டதாலோ, அல்லது சுதந்திரம் அற்ற அடிமை மனோபாவத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் யூத பெண்களின் இடையே இருந்து வந்த அறிவான பெண் என்பதினாலோ ,இயேசுவின் முழு பிரியத்துக்கும் ஆளானவள் என்ற காரணத்தாலோ மரியா இயேசுவின் சீடகர்களிடமிருந்தே பொறாமை கலர்ந்த வெறுப்பை பெற்றிருக்க வாய்ப்பிருக்கிறது .
ஒன்று மட்டும் அன்றும் இன்றும் கொஞ்சம் கூட மாற்றம் இல்லாமல் ,இன மொழி இட பாகுபாடின்றி ஆண்களின் அடிப்படை குணமாக இருந்து வருவது, பிடிக்காத பெண்களை படு கேவலமாக பேசுவது தான் . விபச்சாரி என்று அழைத்து விட்டால் அவள் நொறுங்கி விடுவாள். தளர்ந்து விடுவாள் ,இயலாமை தொற்றி கொள்ளும் பெண் எப்படி வேண்டுமானாலும் வசைப்பட கூடியவள் . ஒதுக்கு புறங்களின் மாசுப்பட்ட படிக்கட்டுகளில் ஆண்களின் வார்த்தைகளில் மட்டும் பேசி ,பார்த்து ,கேட்டு வாழ்வின்றி வாழ்ந்து மடிந்து விடுகிறாள். நம்மூரிலேயே இது இந்த 21 ஆம் நூற்றாண்டிலேயே இருக்கும் பட்சம் மக்தலீனா மரியாவின் நிலைமையின் பயங்கரம் நினைத்து அச்சம் கொள்கிறேன் .

அவர் எழுதிய சுவிசேஷங்கள் பலதும் ஆணாதிக்க சமூகம் அழித்திருக்கும் வாய்ப்பை பல ஆய்வாளர்களும் குறிப்பிட்டுள்ளனர். எத்தனை வலிமை கொண்ட மனதுடன் மரியா இயேசுவின் கல்லறையில் காத்திருந்திருப்பாள் . எத்தனை புரிதல்களுடனான காத்தலும் கூட அது. பெண்மையை மறுக்கும் சமூகத்தில் அறிவு ரீதியாக போர் தொடுத்த முரண்பட்டே வாழ்ந்து முடித்த பெண் ஞானி . இயேசுவின் வார்த்தைகள் கூட நாம் இன்று அறிவது சரியாக தானா? மரியாவின் மீதான இயேசுவின் அன்பை புரிந்து கொள்ள முடியாதவர்கள் ,அவளை விபச்சாரி என்று உரக்க கூறியவர்கள் , அவளின் சமர்ப்பண மனோ நிலையை உணர தவறியவர்கள் வாயிலாகவா நாம் அந்த ஞான சூரியனை அறிகிறோம்? ஜெயமோகனின் எழுத்து இப்படியெல்லாம் கூட எண்ண தூண்டுகிறது ...

இவை எனக்குள் எழுந்த பல சந்தேகங்களில் ஒரு சில ஆழம் குறைந்த கேள்விகள் ? மீதம் ...............


http://www.jeyamohan.in/
http://www.gnosis.org/library/marygosp.htm
http://users.misericordia.edu//davies/thomas/Trans.htm